ரஜினியின் புதிய படம் லிங்கா. இந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். லிங்கா படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடந்தது. தொடர்ந்து 40 நாட்கள் மைசூர், மாண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
லிங்கா படத்தை கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இந்த படபூஜையின்போது நடிகரும், கர்நாடக மந்திரியுமான அம்பரீஷ் அவரது மனைவி நடிகை சுமலதா உள்பட கன்னட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி பட ஷூட்டிங் கர்நாடகாவில் நடைபெறுவதால் கன்னட திரை உலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில் ஷூட்டிங் தொடங்கியது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
ரஜினி-சோனாக்ஷி பங்கேற்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங்குக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ரஜினிக்கு கன்னட அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கும், கர்நாடகாவுக்கும் எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கண்டிக்கிறோம் என்று கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்தது. அந்த அமைப்பினர் ரஜினியை கண்டித்து ராம்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரஜினியை கண்டித்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினார்கள். ரஜினியின் உருவ பொம்மையையும் எரித்தனர். அந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா கூறும்போது, கன்னடராக தன்னை சொல்லிக் கொள்ளும் ரஜினி கன்னடர்களுக்காக எதையும் செய்யவில்லை.
காவிரி, ஒகேனக்கல் விவகாரங்களில் கர்நாடகத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியிருக்கிறார். கன்னட மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கண்டிக்கிறோம். அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மாண்டியா மட்டுமல்ல கர்நாடகாவின் எந்த பகுதியிலும் நடக்ககூடாது. மீறி நடத்தினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடுத்துவோம் என்றார்.
ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும் நேற்று படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. இதற்கிடையே கன்னட அமைப்பினரை சமரசப்படுத்தும் முயற்சியில் ரஜினியின் நண்பரும், கர்நாடக மந்திரியுமான நடிகர் அம்பரீஷ் ஈடுபட்டுள்ளார். கர்நாடகாவில் ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment